
கடந்த 1971-ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து விலகி தனி நாட்டாக உருவான வங்கதேசம், அந்த காலப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் செய்த போர்க்குற்றங்களுக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அப்போது நடைபெற்ற போரின்போது, 30 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதுடன், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகினர் என சர்வதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது பாகிஸ்தான் அதிகாரிகள் தாகாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் சூழலில், வங்கதேச அரசு இந்த கோரிக்கையை அதிகாரபூர்வமாக முன்வைத்துள்ளது.
மேலும், 1971 பிரிவின் போது பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்திற்கு வழங்கப்பட வேண்டிய ₹37,000 கோடி நிதி இதுவரை தரப்படவில்லை என்றும், அதை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதற்குட்பட்ட மேலும் ஒரு முக்கிய கோரிக்கையாக, வங்கதேசத்தில் முகாம்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கவைக்கப்பட்டுள்ள 3 லட்சம் பாகிஸ்தானியர்களை பாகிஸ்தான் அரசே திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும் என்பதையும் வங்கதேசம் வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரங்கள் இருநாடுகளுக்கிடையில் வரலாற்று நீதிக்கான புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.