இளையராஜா தனது 81 வயதில் முதல் சிம்பொனியை லண்டனில் வெளியிட்டுள்ளார். இந்த இசை நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி அன்று லண்டனில் ஈவண்டிம்  அப்பல்லோவில் நடைபெற்றது. சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றுவதற்கு முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளையராஜாவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இளையராஜாவின் பிறந்த நாள் அன்று ஜூன் 2ஆம் தேதி அவருக்கு பாராட்டு விழா நடைபெறும் என சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இசைஞானியின் இசையை உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் ரசித்த நிலையில் தற்போது தமிழ்நாடு மக்களும் ரசிக்க வேண்டும் என்பதற்காக சிம்பொனி இசையை ஏற்பாடு செய்ய ஏற்கனவே சட்டசபை உறுப்பினர் சிந்தனை செல்வன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கைக்கு முதல்வர் கூறியதாவது, நான் இளையராஜாவை சந்திக்கும்போது இதை தெரிவித்தேன், ஆனால் 400க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை ஒரே நேரத்தில் அணிவகுத்து இசை நிகழ்ச்சியை நடத்துவது என்பது சாதாரண காரியம் அல்ல.

அது தற்போது சாத்தியமில்லை. எனவே விரைவில் அதை கண்டிப்பாக செய்ய முயற்சிப்பதாக இளையராஜா உறுதியளித்துள்ளார் என கூறினார். மேலும் தமிழ்நாடு அரசு இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசை பயணத்தையும், லண்டனில் சிம்போனி அரங்கேற்றி தமிழகத்தின் பெருமையை உலகெங்கிலும் பரப்பியதற்காக அவருக்கு ஜூன் 2ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என சட்டமன்ற கூட்டத்தில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.