
நவீன காலகட்டத்திலும் சிலர் மூடநம்பிக்கையினால் பெரும் ஆபத்தை சந்திக்கின்றனர். அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் கோலர்ஸ் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதேஷ்வர்மா. இவருக்கு மனைவி ஒருவர் உள்ளார். மேலும் ஆதேஷ் வர்மாவுக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அந்த ஆண் குழந்தையின் பெயர் மயங்க். இந்த நிலையில் தம்பதிகள் இருவரும் தங்களது காலனிக்கு அருகில் உள்ள மாந்திரீகவாதியின் வீட்டிற்கு குழந்தைக்கு பூஜை செய்வதாக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பூசாரி குழந்தையை நெருப்பிலிட்டு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் உடனே குழந்தை கதறி அழ பதற்றத்தில் பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்களிடம் உண்மையை கூறாமல் குழந்தையின் முகத்தில் சூடான தண்ணீர் விழுந்ததாக பொய் கூறியுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் குழந்தைக்கு ஏற்பட்ட காயத்தை வைத்து சந்தேகத்தில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை மாந்திரீகவாதியிடம் அழைத்துச் சென்றதும் அங்கு பூஜை என்ற பெயரில் அவர் செய்த செயலால் குழந்தைக்கு படுகாயம் அடைந்துள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் மாந்திரீகவாதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாந்திரீகவாதி செய்த பூஜையால் குழந்தைக்கு அதிக தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் குழந்தைக்கு பார்வை பறிபோய் விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பூஜை என்ற பெயரில் மாந்திரீகவாதி செய்தது என்ன? என்பது விசாரணை முடிவிலே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.