திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ்(20). அவரின் நண்பர் கதிர்(21).இருவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம்  இன்பராஜின் பிறந்தநாள். அன்று காலை இன்பராஜும், கதிரும்  மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை கதிர் ஓட்டினார். மழை பெய்ததால் கதிரின் செல்போன் மழையில் நனைந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டே கதிர் செல்போனை எடுக்க முயற்சி செய்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பு சுவரில்  மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த  இன்பராஜ் படுகாயமடைந்து  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று இன்பராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கதிரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.