
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, திமுக பட்ஜெட்டில் வெற்று அறிவிப்பு மற்றும் நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளே உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம், கல்வி கடன் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் அப்படியே இருக்கிறது. அதிமுக ஆட்சியில் சென்னைக்கு அருகே புதிய நகரம், பட்டா வழங்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. காலை உணவு திட்டம் புதிய திட்டம் கிடையாது. அதுவும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளில் ஐம்பதாயிரம் அரசு பணியிடங்களை மட்டுமே நிரப்பியுள்ளனர். அடுத்த ஓராண்டு 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடியுமா? 2026 தேர்தலில் வாக்குறுதிகளை பெறுவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முடியாது. நாட்டிலேயே அதிக கடன் வாங்கி உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். நிர்வாக திறமையற்ற அரசு நடக்கிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை. வருவாய் அதிகரிக்கிறது, கடனும் அதிகரிக்கிறது. ஆனால் திட்டங்கள் எதுவும் இல்லை. எதிர்ப்பை குறைக்க பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர் என விமர்சித்துள்ளார்.