
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இரு மொழி கொள்கையே போதுமானது. அதுவே இந்திய ஒருமைப்பாட்டிற்கும் இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் ஏற்புடையதாக இருக்கும். மும்மொழிக் கொள்கை என்பதை இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீது திணிக்க கூடாது என்பதுதான் நமது தமிழ்நாடு அரசின், தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு. பாஜகவை சேர்ந்தவர்கள் இந்தியை படித்தால் உடனே வேலைவாய்ப்பு கிடைத்துவிடும் என கூறுகின்றனர்.
இந்தியை படித்தால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு பெற முடியும் என மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றனர். சொல்லப்போனால் ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களிலேயே வேலைவாய்ப்பு இல்லை. ஹிந்தி பேசக்கூடிய நபர்கள் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகின்றனர் என்பதுதான் உண்மை. ஒரே தேசம் ஒரே மொழி என்கிற நிலையை எதிர்காலத்தில் உருவாக்குகிற உள்நோக்கத்தோடு பாஜக ஆட்சியாளர்கள் செய்வதை அம்பலப்படுத்துகிறோம். அதை எச்சரிக்கிறோம் என கூறியுள்ளார்.