
சென்னை மாவட்டம் விஜயராகவபுரத்தில் ஐடி ஊழியரான நேதாஜி என்பவர் வசித்து வந்தார். நேற்று அதிகாலை நேதாஜியின் வீட்டில் இருந்து அளவுக்கு அதிகமான புகை வந்ததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் நேதாஜி எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது குடும்ப பிரச்சினையால் நேதாஜி திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். மன உளைச்சலுக்கு ஆளான நேதாஜி தினமும் மது குடித்து வந்தார். நேற்று அதிகாலை 3 மணிக்கு நேதாஜி மது குடித்துவிட்டு சிகரெட்டை பற்ற வைத்து கட்டிலில் படுத்து தூங்கிவிட்டார். அப்போது சிகரெட் மெத்தையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த நேதாஜி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.