தானே பகுதியில் வசித்து வரும் 55 வயது நபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வதற்காக பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டதன் விளைவாக 1.19 கோடி வரை இழந்தார். அதாவது இந்த நபருக்கு கடந்த ஜனவரி 7 அன்று ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் கடத்தல் குழு ஒன்று ஒரு பெண் மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் முதலீடு செய்ய விருப்பமா? என்று கேட்டதோடு கேஒய்சி செயல்முறைக்காக ஆதார் மற்றும் PAN கார்டு புகைப்படங்களை வழங்குமாறு கேட்டுள்ளார்.

இதற்காக அந்த நபர் முழு விபரங்களையும் அனுப்பிய நிலையில் ஒரு டிரேடிங் ஆப்பை பதிவிறக்கம் செய்ய கூறியுள்ளனர். அதோடு அவரை ஒரு வாட்ஸ் அப் குழுவில் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து அந்த ஆப் மூலமாக பணத்தை எடுக்க முடிந்ததால், அந்த நபர் அதனை உண்மை என நம்பி ஜனவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை 1.19 கோடி வரை அனுப்பி உள்ளார். அதன் பின் பணத்தை திரும்ப பெற முயன்ற போது “வரிகளை செலுத்தினால்தான் பணத்தை எடுக்க முடியும்” என்று அந்தப் பெண் கூறினர்.

இதனால் தான் மோசடி அடைந்ததை உணர்ந்த அந்த நபர் தானே காவல்துறையில் புகார் கொடுத்தார். அதோடு வாட்ஸ்அப் குழுவின் விவரங்கள், மோசடிக்காரர்களின் தொலைபேசி எண்கள், போலி டிரேடிங் ஆப்ன் விவரங்கள் மற்றும் பணவர்த்தனை செய்த விவரங்கள் போன்றவற்றை காவல்துறையிடம் வழங்கினார். இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் 66 D பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மும்பை,புனே, தானே போன்ற இடங்களில் இது போன்ற மோசடி அதிகரித்து வருவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.