
நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக ஏராளமான நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகிறார்கள். இது பற்றி சீமானிடம் கேட்கும் போது எங்கள் கட்சிக்கு இது களை உதிர் காலம் என்கிறார். நேற்று கூட மகளிர் மாநில பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியில் மாநில அளவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் என அடுத்தடுத்து கூண்டோடு பலர் விலகி வருகிறார்கள்.
இப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது பல குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கிறார்கள். இந்நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சீமான் கட்சியை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாக பாவேந்தன் குற்றம் சாட்டியுள்ளதோடு கட்சியில் இருந்து விலகுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சீமான் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு செல்லும் நிலையில் அந்த மாவட்ட செயலாளர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி சர்ச்சையாக பேசி வரும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.