
தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வரும் ஒரு பெண் தன்னுடைய முதல் கணவரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெறவில்லை. அதற்கு பதிலாக பரஸ்பர சம்மதத்துடன் கையெழுத்து போட்டு இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு அந்தப் பெண் வேறொருவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டாவது கணவரையும் அந்த பெண் பிரிந்து விட்ட நிலையில் தன்னுடைய கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் கொடுத்திருந்தார். அதோடு குடும்ப நல நீதிமன்றத்தில் அந்த பெண் தனக்காகவும் தன்னுடைய மகளுக்காகவும் இரண்டாவது கணவர் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் அந்த கணவன் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இரண்டாவது கணவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் முதல் கணவனிடம் இருந்து முறையாக விவாகரத்து பெறாததால் இரண்டாவது கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதல் கணவனிடமிருந்து விவாகரத்து பெறாவிட்டாலும் இரண்டாம் கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற சட்டப்படி அந்த பெண்ணுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்று கூறினர். திருமணத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து ஆதாயங்களையும் அந்த கணவன் அனுபவிக்கும் போது கடமைகளையும் தட்டி கழிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர். மேலும் அவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவித்தனர்.