
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு முதல்வராக பைரன் சிங் இருக்கிறார்.மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இரு சமூகத்தினர் இடையே நடக்கும் பிரச்சனை என்பது பெரும் கலவரமாக மாறியுள்ளது. இதற்கிடையில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக முதல்வரின் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் முதல்வர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் முதல்வர் பைரன்சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை அந்த மாநில ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது. சிறிது காலம் பிரச்சனை அடங்கிய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கடத்திச் சென்று கொலை செய்ததால் மீண்டும் மணிப்பூரில் பிரச்சனை வெடித்தது.
இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் முதல்வர் பைரன்சிங் தான் என்றும் அவர் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதன் ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை அவர் மறுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்