
புதுச்சேரியை சேர்ந்த சிறுமி ஒரு நபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பேச ஆரம்பித்தார். அவர் சிறுமியை காதலிப்பதாக கூறினார். ஆனால் சிறுமி காதலை ஏற்க மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த அந்த மர்ம நபர் ஆடை இல்லாமல் வீடியோ கால் செய். அப்படி இல்லை என்றால் உனது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே அந்த நபர் நீ கடலூருக்கு வரவில்லை என்றால் உனது புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமி போலீசாருடன் அந்த நபர் கூறிய இடத்திற்கு சென்றார்.
அங்கு வைத்து சிறுமியை மிரட்டிய முஜீப் அலி என்பவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரது செல்போனை ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. ஏற்கனவே முஜீப் பல பெண்களை வீடியோ காலில் ஆடை இல்லாமல் பேச சொல்லி மிரட்டியுள்ளார். எதற்காகவே இன்ஸ்டாகிராமில் பத்துக்கு மேற்பட்ட போலி ஐடிகளையும், 5-க்கும் மேற்பட்ட பேஸ்புக் ஐடிகளையும் உபயோகப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.