தமிழக அரசியல் களம் ஒவ்வொரு நாளும் சூடு பிடிக்கிறது. 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வர இருக்கும் நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அரசியல் களத்தை இன்னும் உற்று நோக்கி கவனிக்கிறார்கள் என்றே கூறலாம். கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள விஜய் அரசியலுக்கு வந்தது திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் களம் காணும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்துள்ளார். இதற்கிடையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக திமுக நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் ஜானகி அம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவின் வேண்டுகோளை ஏற்று அவர் பற்றி புகழ்ந்து பேசிய வீடியோ வெளியானது. அதற்கு முன்னதாக சீமான் நடிகர் ரஜினிகாந்தை திடீரென நேரில் சென்று சந்தித்தது மிகப்பெரிய பேசும் பொருளாக மாறியது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிய போது அவரை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்த சீமான் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்த நிலையில் அதன் பிறகு ரஜினிகாந்தை புகழ்ந்து பேசுகிறார். அதோடு சங்கி என்றால் நண்பன் என்று புதுவிளக்கமும் கொடுக்கிறார். சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்த நிலையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக தான் சென்றேன் என்றார்.

இருப்பினும் அவர் பாஜக உடன் கூட்டணி மற்றும் 2026 தேர்தல் ஆகியவற்றை மனதில் வைத்து தான் ரஜினியை சந்தித்ததாக பேசப்பட்டது. நடிகர் விஜயின் முதல் மாநாடு நடைபெற்ற போது அது மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக வெற்றி பெற்றது என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டிய நிலையில் ரஜினியின் பிறந்தநாளுக்கு விஜயும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் திமுக கூட்டணிக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு ரஜினிகாந்த் உதவுவதாகவும் தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பாஜக 2026 ஆம் ஆண்டு கண்டிப்பாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்றும் அந்த கூட்டணி ஆட்சியில் பாஜகவும் கண்டிப்பாக இடம்பெறும் என்றும் உறுதியாக கூறி வருகிறார்கள்.

இந்த கூட்டணிக்குள்  அதிமுக, விஜய் மற்றும் சீமான் ஆகியோரையும் இணைக்க பாஜக முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. மேலும் இதன் எதிரொலியாக தான் ரஜினியை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் மீண்டும் 2026 தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.