
சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் டிபி சத்திரம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவரது இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் நின்ற மற்ற வாகனங்களுக்கும் பரவி ஐந்து வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வீட்டின் முதல் தளத்தில் வசிக்கும் நடராஜ் என்ற முதியவர் பெட்ரோல் ஊற்றி இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
உடனே போலீசார் நடராஜை கைது செய்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. ஆறு லட்ச ரூபாய் பணம் கொடுத்து கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு நடராஜ் தனது மனைவியுடன் வினோத் வீட்டில் குத்தகைக்கு குடியேறினார். ஒரு ஆண்டுக்கு முன் நடராஜின் மனைவி உயிரிழந்தார். இதனையடுத்து நடராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு பல பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனை அறிந்த கோபமடைந்த வினோத் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். அதை பார்த்து நடராஜ் பலமுறை சிசிடிவி கேமராவை உடைக்க முயன்றுள்ளார். ஒருநாள் நடராஜ் ஒரு பெண்ணை அழைத்து வந்தார். ஆனால் குடிபோதையில் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் நடராஜ் அவரை சரமாரியாக அடித்து வெளியே இழுத்து செல்லும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை பார்த்த வினோத் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார்.
அப்போது லீஸ் பணத்தை கொடுத்தால் தான் காலி செய்வேன் என நடராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து நடராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் 3 மாதங்களுக்குள் பணத்தை கொடுக்க வினோத் உத்தரவாதம் கொடுத்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நடராஜை பழிவாங்கும் நோக்கத்தோடு வினோத்தின் வாகனம் உள்ளிட்ட மற்ற வாகனங்களுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.