தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் கிராமத்தில் துரை ரகுபதி என்பவர் ரசித்து வருகிறார். இவர் பழைய கார்களை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் துரை ரகுபதி மதுரையைச் சேர்ந்த இடைத்தரகரான பாண்டியன் என்பவரை அணுகி வாடிக்கையாளரின் காரை பண தேவைக்காக அடமானம் வைக்க நினைத்தார். உடனே பாண்டியன் சென்னையில் இருக்கும் இடைத்தரகரிடம் பேசி இருப்பதாகவும், அங்கு சென்று காரை காண்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துரை ரகுபதி சென்னைக்கு வந்து உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது செல்போனில் தொடர்பு கொண்ட பாண்டியன் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே இடைத்தரகர் காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதனால் துரை ரகுபதி மாருதி காரை எடுத்துக்கொண்டு பாண்டியன் கூறிய இடத்திற்கு சென்றார்.

அப்போது பாண்டியன் அனுப்பியதாக கூறிய இரண்டு நபர்கள் காரை டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அவர்கள் காரில் சிறிது தரும் சென்றவுடன் மற்றொரு நபர் காரில் ஏறினார். அவர் திடீரென துரை ரகுபதியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுபற்றி கேட்டபோது பாண்டியன் தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் உடனடியாக அவனை இங்கே வரச்சொல் என மிரட்டி உள்ளனர். அதற்கு ரகுபதி, இது எனது கார்.

பாண்டியனுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது என கூறினார். ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அவரை கோயம்பேடு ரோகிணி திரையரங்கம் அருகே அழைத்துச் சென்றனர். அங்கு 6 பேர் கொண்ட கும்பல் ரகுபதியை கட்டையால் தாக்கி கார் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ரகுபதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் கௌதம், அவரது தோழி ஸ்வேதா, நாகராஜன், கிஷோர் பாலாஜி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.