திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தருவதாக பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத்தை பெங்களூருவை சேர்ந்த 59 வயதுடைய பேராசிரியர் ஒருவர் பார்த்தார். அவர் தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து அந்த விளம்பரத்தில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது கோவில் அர்ச்சகர் என கூறி மறுமுனையில் பேசிய நபர் சொன்னதை கேட்டு 5.2 லட்ச ரூபாய் பணத்தை பேராசிரியர் அனுப்பியுள்ளார். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பேராசிரியர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
