தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை ஒரு அரசியல்வாதியாக திமுக அங்கீகரிக்கவில்லை என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். இந்த தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, கலைஞர் கால முதல் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் காலம் வரையில் திமுகவை மையப்படுத்தி பேசாமல் தமிழகத்தில் அரசியல் இருக்காது. புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் கூட திமுகவையும் முதல்வரையும் மையப்படுத்தி தான் பேச வேண்டி உள்ளது. நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வந்துள்ள நிலையில் அவருக்கு கள நிலவரம் என்பது தெரியாது. சினிமா ரசிகர்களை மட்டும் நம்பிக்கொண்டு அவர் அரசியலுக்கு வந்துள்ளார்.

அவர் திமுகவை பற்றி விமர்சனம் செய்வது ஒரு சரியான அரசியல்வாதிக்குரிய நாகரிகமாக இருக்காது. திமுகவை பொருத்தமட்டில் மழை வெள்ளம் உள்ளிட்ட அனைத்து சூழ்நிலைகளிலும் களத்தில் இறங்கி வேலை பார்க்கிறோம். வேங்கை வயல் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் மக்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம். வேங்கை வயலுக்கு செல்லாத விஜய் அந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறாத விஜய் அதைப்பற்றி பேசுகிறார். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காத அவர் திருமண மண்டபத்திற்கு வரவழைத்து உதவி செய்துள்ளார்.

வேங்கைவயல் சம்பவத்தை பொருத்தமட்டில் பத்திரிக்கை செய்திகளில் மட்டும்தான் சொல்கிறார்களே தவிர களத்தில் இறங்கி விஜய் எதுவுமே செய்யவில்லை. களத்திற்கு செல்லாத விஜய் களத்தில் இறங்கி வேலை பார்க்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினரை போட்டோ சூட் நடத்துவதாக விமர்சிக்கிறார். விஜய் விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியது. நாங்கள் போட்டோ சூட் நடத்துகிறோம் என்றால் விஜய்யும் அதைத்தான் செய்கிறார். விஜயை நாங்கள் ஒரு அரசியல்வாதியாக அங்கீகரிக்காத நிலையில் அவர் பேசுவதை நினைத்து கவலைப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது என்றார்.