கோயம்புத்தூர் மாவட்டத்தில் ராபின் டென்னிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் எலினா லாரட் என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கூடைப்பந்து வீராங்கனையாக இருக்கிறார். இவர் பள்ளிகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் பகுதியில் கடந்த 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் நேற்று சென்னை வந்த நிலையில் திடீரென வயிற்று வலி மற்றும் வாந்தி வந்துள்ளது. இதனால் தன் மாமாவுக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார்.
அவர் அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வயிற்று வலி அதிகமானதால் பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். பின்னர் அவருடைய உடலை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ள நிலையில் அவர் இளநீர் குடித்ததும் ரயிலில் வரும்போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டதும் தெரியவந்துள்ளது. சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தான் மாணவி உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
