இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி திருமண வயது என்பது ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 ஆகும். இதற்குக் கீழ் வயதுடைய இளைஞர்கள் திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆக கருதப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது 21 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்ற மசோதாவை தாக்கல் செய்தனர். இதனை பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்து வந்தது. இருந்த போதிலும் 17ஆவது மக்களவை பதவி காலம் முடிவடைந்தது.

எனவே இந்த ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஆண், பெண் இருபாலருக்கான திருமண வயது 21 ஆக பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வை மேற்கொள்ள உள்ளது. இந்த பாராளுமன்ற நிலைக்குழுவில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், விளையாட்டு ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 22 ஆம் தேதி இந்த பாராளுமன்ற நிலை குழு காங்கிரஸ் எம்.பி திக்விஜய் சிங் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர், இளைஞர் குரல் இயக்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதில் பெண்கள் திருமண வயது குறித்து விவாதிக்கப்படும். கல்வி தொடர்பான புதிய தாக்கங்களை ஏற்படுத்தும் அறிவியல் கொள்கைகளைப் பற்றி பேசப்படுகிறது.சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் பற்றியும், என்.சி.இ.ஆர்.டி., கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி ஆகிய நல அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை நடத்தப்படும்.