
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் விஜயின் கொள்கைகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சீமான் கூறியுள்ளார். அதோடு நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் விஜய்யை மிகவும் கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசியதோடு செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் இன்று மிகவும் கடுமையாக விளாசினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கார்த்தி சிதம்பரத்திடம் சீமான் விஜயை விமர்சித்தது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது, அரசியல் கூட்டத்தின் தொகுப்பை நான் சமூக வலைதளங்களில் பார்த்தேன். இனிதான் அவர்கள் தங்களுடைய கொள்கை விளக்கங்களை வெளிப்படையாக சொல்ல வேண்டும். ஒரு மறைசக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அது ஒரு வடிவமாக மாறி தேர்தலை சந்திக்குமா என்பது தெரியவில்லை. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை விஜய் விமர்சிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு போகப் போக ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாடுகள் தெரியும் என்றார். அதன்பிறகு சீமான் தொடர்ந்து விஜயை விமர்சித்து வருகிறார் என்ற கேள்விக்கு சீமானுக்கு பயம் வந்திருக்கும். ஏனெனில் அவருக்கு ஒரு நிரந்தர வாக்கு வங்கி கிடையாது. ஒருமுறை வாக்களிப்பார்கள். ஆனால் அதே சமயம் மறுமுறை வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறினார்.