உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் ஏரியா மேலாளராக பணியாற்றிய 42 வயது தருண் சக்சேனா, பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை தனது வீட்டில் தருண் இறந்து கிடந்தார், அவரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மற்றொரு அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தருண் கடந்த இரண்டு மாதங்களாக கடினமான இலக்குகளை அடையுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், பணியைப் பூர்த்தி செய்ய முடியாததால் சம்பளப் பிடித்தம் செய்வதாக மிரட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

தருண் தனது மனைவிக்கு எழுதிய ஐந்து பக்க கடிதத்தில், பணி அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலை விவரித்துள்ளார். பஜாஜ் பைனான்ஸின் இஎம்ஐ வசூல் பணிகளை மேற்கொண்டார் என்றாலும், பல சிக்கல்களால் இலக்குகளை அடைய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது மூத்த அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தி, இலக்குகளை எவ்விதத்திலும் அடையும்படி தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் கடிதத்தில் தெரிவித்தார்.

தருணின் தற்கொலை குறிப்பில், தனது சக தொழிலாளர்களுடன் சேர்ந்து திரும்பப் பெற முடியாத இஎம்ஐகளுக்கு பணம் செலுத்தியதாகவும், இதைத் தீர்க்கவேண்டும் என்று பலமுறை மேலாளர்களிடம் எடுத்துரைத்தாலும், அவர்கள் அதை கவனிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். 45 நாட்களாக தூங்கவில்லையெனவும், சாப்பிடவில்லையெனவும், தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது குடும்பம் பற்றிய சிந்தனையையும், எதிர்காலத்தின் மீதான பயத்தையும் வெளிப்படுத்தியுள்ள தருண், குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை ஆண்டு இறுதி வரை செலுத்திவிட்டதாகவும், தனது குடும்பத்தினர் மன்னிப்புக் கோரினார். மேலும், தனது பெற்றோர்களிடம் குடும்பத்திற்காக இரண்டாவது தளத்தை கட்டி வசதியாக வைக்கும்படி கேட்டுள்ளார்.

தருண் தனது மூத்த அதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டு, தமது தற்கொலைக்கு அவர்கள் பொறுப்பாக இருப்பதாக கூறியுள்ளார். அவரது குடும்பத்தினரிடம், அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். தற்கொலைக்கு முன்னிட்ட மன அழுத்தத்திற்கு மூத்த அதிகாரிகளே காரணம் என அவர் குறிப்பிட்டார்.

பிரேத பரிசோதனை முடிவு காத்திருப்பதாகவும், குடும்பத்தினர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் மூத்த அதிகாரி வினோத் குமார் கவுதம் தெரிவித்துள்ளார்.