தர்மபுரி மாவட்டத்திலுள்ள கீழ்மொரப்பூர் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேந்தர் என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில் அவர்களை பெற்றோர் கண்டித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஓடிவிட்டார்கள். இதனால் கோபமடைந்த பவித்ராவின் தந்தை பூபதி உட்பட உறவினர்கள் வாலிபர் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் வீட்டை சூறையாடியதோடு வாலிபரின் பெற்றோரை கடுமையாக தாக்கினர்.

ஆனால் அவர்கள் இருக்கும் இடம் தங்களுக்கு தெரியாது என அவர்கள் கூறியதால் ஆத்திரத்தில் மீண்டும் தாக்கியதோடு இதனை தடுக்க வந்த சுப்பிரமணி என்பவரையும் அவர்கள் கடுமையான முறையில் தாக்கினார். அதோடு வாலிபரின் தாய் முருகம்மாளின் சேலையை உருவி அவமானப்படுத்தியதோடு, அவரை கடத்தி சென்றுள்ளனர். அதாவது தங்கள் மகள் கிடைக்கும்வரை முருகம்மாள் எங்களுடன் இருக்கட்டும் என்று கூறி கடத்தி சென்று வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் வாயில் மதுவை ஊற்றியதோடு சேலையை உருவி அவமானப்படுத்தினர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முருகம்மாளை மீட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த முருகன், சுப்பிரமணி மற்றும் முருகம்மாள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.