ஜியோர்ஜியா மெலோனி இத்தாலி நாட்டின் பிரதமர் ஆவார். இவரை கோர்டீஸே எனும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த 2021-ல் தனது சமூக வலைத்தளங்களில் உருவ கேலி செய்துள்ளார். அதில் அவர் மெலோனியின் பின்னணியில் பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, மெலோனியின் உயரம் குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அதில் “நீ என்னை பயமுறுத்த முடியாது. நீ வெறும் 4 அடி உயரம் தான். என்னால் உன்னை பார்க்க கூட முடியவில்லை” என்ற கருத்தையும் பதிவிட்டுள்ளார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் சமூக வலைத்தளத்தில் வாக்குவாதம் தொடங்கியது. இது முற்றிய நிலையில் மெலோனி கோர்டீஸே மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் கோர்டீஸேக்கு 5000 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பு படி ரூ.4.5 லட்சம் அபராதம் விதித்தது. இதேபோன்று முன்பதாக ராபர்ட்டோ சேவியானோ என்ற பத்திரிக்கையாளர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மெலோனியை அவமதித்துள்ளார். ராபர்ட்டோக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு அவருக்கு 1000 யூரோக்கள் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
