சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெண் போலீசாக பிரியங்கா (27) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இதே காவல் நிலையத்தில் சேகர் (30) என்பவரும் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டர் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒன்றாக ராயபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று வழக்கம்போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சேகர் வீட்டை விட்டு சென்ற நிலையில் மனமுடைந்த பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சேகர் தன் மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.