ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினியால் அவதிப்படும் மக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக உணவு தினத்தின் முக்கிய நோக்கமாகும். உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணவு தான் உயிர் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரம்.

இந்த உலகில் வாழும் உயிர்கள் நோய் இல்லாமல் வாழ தேவையான ஊட்டச்சத்து உணவில் தான் இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ஆம் தேதி உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, பசி பட்டினியால் அவதிப்படும் மக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கடந்த 1945-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இந்த நாளை உருவாக்கியது. இந்த நாளில் நமக்கான உணவினை உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதல் உணவினை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் நன்றி செலுத்த வேண்டும்.

உலக உணவு தினத்தின் இந்த ஆண்டு கருப்பொருள் உணவின் தரம் உயிர்களை காக்கும் என்பதே ஆகும். உணவுகளை சமைத்தால் மட்டும் போதாது. அதில் ஊட்டச்சத்து இருப்பது மிகவும் அவசியம். நம் சமைக்கும் உணவுகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டும். அப்போதுதான் வரும் காலத்திலும் நிகழ்காலத்திலும் வரும் நோய்களை எதிர்கொள்ளும் சக்தி இருக்கும்.