
குறிப்பிட்ட சமுதாயத்தினரை அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது, தனது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று சீமான் பேசி வந்தார். அப்போது குறிப்பிட்ட சமுதாய மக்களை இழிவாக பேசியதாகவும், வட மாநில தொழிலாளர் குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும் குறிப்பிட்ட சமுதாயத்தினர் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக சீமான் மீது IPC 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தற்போது கடந்த வாரம் கருங்கல்பாளையம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி திருப்பூரில் இருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் கொடுத்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஈரோடு நீதிமன்றத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக வந்துள்ளார்.