கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் தேவையில்லாத ஆவணங்களை கேட்பதாகவும், பொதுமக்களை அலை கழிப்பதாகவும் சேலம் மின் பகிர்மான அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மின்வாரிய உயர் அதிகாரிகள் உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் இளமின் பொறியாளர் எழிலரசன், மின்வாரிய ஊழியர் தணிகை நாதன் ஆகியோர் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டது தெரியவந்தது. இதனால் கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி எழிலரசனையும், தணிகை நாதனையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.