மதுரை மாவட்டத்தில் உள்ள கோமதிபுரம் அன்பு நகர் ராஜராஜன் தெருவில் டாக்டரான பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரையில் சுகாதாரத் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு வாசுகி(67) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு உமாதேவி(45) என்ற மகளும், கோதண்டபாணி(42) என்ற மகனும் இருந்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பாண்டியன் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவரது மகனும், மகளும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் கோதண்டபாணியும், உமாதேவியும் கிடைத்த வேலையை செய்து கொண்டு வாசுகியுடன் வசித்து வந்தனர். மூன்று பேரும் அக்கம் பக்கத்தினரிடம் சரிவர பேசாமல் இருந்தனர். இந்நிலையில் வாசுகியின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கோதண்டபாணி தூக்கிலும், வாசுகி, உமாதேவி ஆகியோர் விஷம் குடித்தும் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மூன்று பேரின் உடல்களும் அழுகிய நிலையில் இருந்தது. அவர்களது உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாண்டியன் தனது குடும்பத்தை பிரிந்து சென்ற பிறகு வாசுகியும், அவரது பிள்ளைகளும் கஷ்டப்பட்டனர். 40 வயதை கடந்த பின்பும் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கவில்லை. அவர்களது எதிர்காலம் என்ன ஆகுமோ என வாசுகி கவலையில் இருந்தார்.

கடந்த சில நாட்களாக உணவின்றி அவர்கள் வறுமையில் இருந்தனர். வீட்டிற்கு மின் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தனர். இதனால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தண்ணீருக்கு கூட மற்றவர்களை நம்பி இருக்கும் நிலையில் தவித்ததால் 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தற்போது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற பாண்டியனின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.