சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் நெட்டுக்குப்பத்தில் மீனவரான ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மனைவி மற்றும் மகன்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நேற்று நெட்டுக்குப்பம் கடற்கரையில் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரஞ்சித் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மீனவரான கோவிந்தராஜ் என்பவர் குடிபோதையில் ரஞ்சித்தை கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில், நேற்று முன்தினம் இருவரும் ஒன்றாக மது குடித்தனர். அப்போது மேலும் மது குடிப்பதற்காக 10 ரூபாய் தருமாறு கோவிந்தராஜ் ரஞ்சித்தை வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரஞ்சித் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கோவிந்தராஜ் ரஞ்சித்தின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.