
சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி ராஜேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் அருகே மாவட்டங்களில் ஏதாவது ஒரு டாக்டரிடம் உதவியாளராக வேலை பார்த்து மருத்துவ படிப்பு படிக்காமல் அனுபவம் அடிப்படையில் சிலர் ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
கடந்த 10 நாட்களில் மட்டும் சேலம் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த தேவராஜன், மணிகண்டன், வாசுதேவன், பன்னீர்செல்வம், ஆண்ட்ரூஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தர்மபுரியில் 2 பேரும், கிருஷ்ணகிரியில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அதன்படி சேலம் சரகத்தில் மொத்தம் 12 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.