சேலம் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையம் பகுதியில் நெசவு தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் ஜானகி கூறியிருப்பதாவது, நான் ஏற்காடு மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்தவள். கடந்த 2009-ஆம் ஆண்டு நானும் வேறு சமூகத்தைச் சேர்ந்த எனது கணவர் செந்தில்குமாரும் கலப்பு திருமணம் செய்து கொண்டோம்.

தற்போது அரசம்பாளையத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் ஊர் தர்மகர்த்தாக்கள் எங்களது வீட்டு குடிநீர் இணைப்பை துண்டித்தது தொடர்பாக வீரபாண்டி பஞ்சாயத்து தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து ஊரில் இருக்கும் கோவிலுக்கு செல்ல கூடாது, யாரையும் சந்திக்க கூடாது என கூறி எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

மேலும் வாடகைக்கு வீடு கொடுத்த வீட்டு உரிமையாளரையும் ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யாமல் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். எனவே சாதிய வன்கொடுமை செய்துவரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.