மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 இடங்களைக் கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள பாஜக சார்பில், சுவேந்து அதிகாரி இன்று (மே 9) காலை 11 மணிக்கு கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

​இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது மேடையிலிருந்த பாஜகவின் மிக மூத்த தொண்டரான 98 வயது மக்னலால் சர்க்காரின் கால்களில் விழுந்து பிரதமர் மோடி ஆசிபெற்றது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 1952-ல் காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றியதற்காகக் கைது செய்யப்பட்டவர் மக்னலால் சர்க்கார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தேசபக்தி பாடல் பாடியதற்காகக் கைது செய்யப்பட்டபோது, நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க மறுத்து நீதிபதி முன்பே மீண்டும் அதே பாடலைப் பாடியவர்.

இவரது வீரத்தைப் பாராட்டிய அன்றைய நீதிபதி, இவருக்கு விமான டிக்கெட் எடுத்து வழியனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் ஆரம்பகால வளர்ச்சிக்கு வித்திட்ட இத்தகைய தியாகச் செம்மலின் காலில் பிரதமர் விழுந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.