ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்திருக்கும் நடுக்குப்பம் ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளி அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதனை அகற்ற வலியுறுத்தி ஊராட்சி மன்றம் சார்பாக பலமுறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் தெரிவித்தார்கள்.

மேலும் ஊராட்சிமன்ற தலைவர் கூட்டத்தை நடத்த முயன்றபோது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர்  ராஜினாமா கடிதம் கொடுத்ததால் ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் மற்றும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சவீதாவும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால்  அதிகாரிகள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார்கள். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேற்று முதல் டாஸ்மாக் கடை இயங்காது என தெரிவித்திருக்கின்றார்.

இதன்பின் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் உறுப்பினர்களின் ராஜினாமா கடிதம் இதுவரை ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தார்கள். ராஜினாமா கடிதம் கொடுத்த உறுப்பினர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். இதனிடையே டாஸ்மாக் கடை மூடப்பட்டது. ஆனாலும் கூட்டம் தொடங்கும் போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.