இரண்டரை வயது குழந்தையை உறவினரே அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அருகே இருக்கும் சீராபள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்த கபில் வாசன்-ராஜாமணி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இவர்கள் தியாகராஜன் என்பவரின் வீட்டு மாடி குடியிருப்பில் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கபில் வாசன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட அவரது மனைவி தனது குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்காக தோசை சுட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது ராஜமணி வீட்டிற்கு அவரின் உறவினர் ராகுல் என்பவர் வந்திருக்கின்றார். எதிர்பாரா விதமாக குழந்தை தருணின் கழுத்தில் ராகுல் காலால் மிதித்தும் கையால் அடித்தும் இருக்கின்றார். இதை பார்த்த ராஜாமணி அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து குழந்தையை காப்பாற்ற முயற்சித்திருக்கின்றார்.

ஆனால் ராகுல் ராஜமணியையும் தாக்கியதாக சொல்லப்படுகின்றது. இதனால் ராஜாமணி சத்தம் போட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதன்பின் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினார்கள். இதனைக் கேட்ட உறவினர்களும் பெற்றோர்களும் கதறி கதறி அழுதார்கள்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து ராஜாமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுலை கைது செய்தார்கள். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தான் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வருவதாகவும் இதனால் என்னை பல பேர் ஏளனமாக பேசுவார்கள். இதில் ராஜாமணியும் ஒருவர். இதனால் என்னிடம் யாரும் பேசுவதில்லை.

எனக்கு ராஜாமணி மீது கோபம் இருந்து வந்த நிலையில் கோபத்தின் காரணமாக குழந்தை தருணை அடித்துக் கொன்றதாக தெரிவித்திருக்கின்றார். இதனால் போலீசார் ராகுலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இரண்டரை வயது ஆண் குழந்தை இறந்தது அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.