
நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் நெல்லியாளத்தில் நகராட்சி கூட்டம் நடைபெற்றதில் தலைவர் சிவகாமி, பொறியாளர் வசந்தன், துணைத்தலைவர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றார்கள். சென்ற மார்ச் மாதம் 31ஆம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் 11 தற்காலிக பணியாளர்களுக்கு பணி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் சென்ற இரண்டு மாதங்களாக தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள். இதற்கு நகராட்சி ஆணையாளர் மகேஷ் பதிலளித்ததாவது, நகராட்சி விதிகளுக்கு முரண்பாடாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தும் அதிகாரம் மன்றத்திற்கு கிடையாது.
நகராட்சியின் விதிகளுக்குட்பட்ட தீர்மானங்கள் மட்டுமே ஏற்கப்படுகின்றது. இந்த பிரச்சனை குறித்து அரசுக்கும் நகராட்சி ஆணையாளருக்கும் கோப்புகள் அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என தெரிவித்தார். இதை அடுத்து கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டி வரி வசூல் செய்வதாகவும் வரியை செலுத்தாத கடைகளுக்கு வைத்து மூடுவதாகவும் தெரிவித்தார்கள்.
இதற்கு முன்கூட்டியே நோட்டிஸ்கள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என தெரிவித்தார். மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும் எங்களுக்கும் அதிகாரம் இல்லையா என கவுன்சிலர்கள் தெரிவித்து திடீரென புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.