அரசு கல்வெட்டு கவுன்சிலர் பெயர் இடம் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மாநகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேயர், மாநகர ஆணையர், மாநகர நல அதிகாரி மற்றும் மற்ற அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள் என பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பலரும் தங்களின் கருத்துக்களை முன் வைத்தனர். இதன்பின் பாரதிய ஜனதா கவுன்சிலர் சுனில் குமார் பேசியதாவது, தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் 22 லட்சம் செலவில் நகர நல்வாழ்வு பரிசோதனை மையம் கட்டப்பட்டு அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு வரவில்லை.

அங்கு வைக்கப்பட்டிருக்கும் அரசு கல்வெட்டிலும் எனது பெயர் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் எனது வார்டு மக்களையும் என்னையும் அவமானப்படுத்தி இருக்கின்றார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் எனது பெயரை கல்வெட்டில் இடம்பெறச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மேயர், பரிசோதனை மையம் கட்டிடம் திறப்பு விழா மாநில அரசு சார்பாக நடைபெறும் விழாவில் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இது சுகாதார துறை சார்பாக நடத்தப்பட்டது. இது குறித்து புகார் கூற வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் கூற வேண்டும் என தெரிவித்தார்.

இவரின் இந்த பதிலுக்கு பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அதிகாரிகளுக்கும் பாரதிய ஜனதா கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து மேயர் மாநகரக் கூட்டம் நிறைவு பெற்றதாக தெரிவித்தார். இதனால் சுனில் குமார் தலைமையிலான பாஜக கவுன்சிலர்கள் 11 பேர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.