தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யிடம் அதிமுக, 90 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவியுடன் கூட்டணிக்கு அழைத்ததாக கூறிய ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்தை ஒப்புக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அதே பேரம் அதிமுகவின் சார்பில் தனக்கும் வந்ததாக தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “துணை முதல்வர் பதவி தரமாட்டேன் என அதிமுக சொல்லியது இல்லை. விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமையாமல் போனது, பொதுவாகவே நிபந்தனைகள் ஒத்துவராததால்தான்,” என விளக்கினார்.

மேலும், “பிக்பாஸ் நிகழ்ச்சியைப்போல் தினமும் கூட்டணி பேச்சு பேசிக் கொண்டிருக்க முடியாது. நான் எப்போதும் சொல்வது போல தேர்தல் கூட்டணி வேறு, ஆட்சிக்கான கூட்டணி வேறு என்று பிரிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. 2006ஆம் ஆண்டு போல பெரும்பான்மை யாருக்கும் வராமல் இருந்தால், நாம் தமிழர் கட்சி எதை செய்யும் என்பது அப்போது தெரிவிக்கப்படும். நாங்கள் ஆட்சியை மாற்றும், ஆள்களை மாற்றும் கட்சி இல்லை. அடிப்படையை மாற்றும் இயக்கம். கட்டிடம் கட்டி வெள்ளை அடிக்கவில்லை, பழைய கட்டிடத்தை இடித்து புதியதாய் கட்ட விரும்புகிறோம்,” என வலியுறுத்தினார்.

மத்திய அரசை கடுமையாக விமர்சித்த சீமான், “இந்தி மொழியை திணித்தது காங்கிரஸ்தான்; அதை எதிர்த்து தமிழ்நாடு போராடியது. ஆனால் இன்று அந்தக் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து மாநில தன்னாட்சி பேசுவது ஏற்க முடியாதது. திராவிடக் கட்சிகள், மாநில உரிமைகளை பறித்தவர்களுடன் சேர்ந்து தனித்த குணம் பேசுகின்றன. முதல்வர் ஸ்டாலின் ‘டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தமிழ்நாடு’ என்கிறார். ஆனால் பேரிடர் நிதி, கல்வி நிதி ஆகியவற்றை கேட்க மாட்டோம்; வரி மட்டும் கொடுப்போம் என்கிற நிலைமையில் இருப்பது உண்மையில் ‘அண்டர் தி கண்ட்ரோல்’ தான்” என விமர்சித்தார். சீமான் கூறிய இந்த பேச்சு, தேர்தல் கூட்டணிப் போக்கு மீதான புதிய பரபரப்பை கிளப்பி இருக்கிறது.