சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 89 வயது முதியவர் ஒருவர் 27-வது மாடியிலிருந்து ஏசி பொருத்தும் இரும்பு கம்பிகளைப் பிடித்துக் கொண்டே கீழே இறங்கிய சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.
தெற்கு சீனா மார்னிங் போஸ்ட் அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி மதியம் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழே வேலை செய்து கொண்டிருந்த ஒரு துப்புரவுத் தொழிலாளியும், பாதுகாப்புப் பணியாளரும் தற்செயலாக மேலே பார்த்தபோது அவர்களின் இதயம் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது.
வானளாவிய உயரத்திலுள்ள அந்த கட்டிடத்தின் வெளிப்புறத்தில், ஒரு முதியவர் ஏசி இயந்திரங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலிகளைப் பிடித்துக் கொண்டு, மிகவும் ஆபத்தான முறையில் கீழ் நோக்கித் தவழ்ந்து வந்து கொண்டிருந்தார்.
உடனடியாக அவர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்ததுடன், “பாட்டி.. அங்கேயே இருங்கள், நகர வேண்டாம்” என உரக்கக் கத்தினர். ஆனால், எதையும் காதில் வாங்காத அந்த மூதாட்டி தனது பயணத்தைத் தொடர்ந்தார். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், 27-வது மாடியில் ஆரம்பித்த அவர் 21-வது மாடி வரை இறங்கிவிட்டிருந்தார். கடும் குளிராலும், உடல் களைப்பாலும் இனி நகர முடியாது என்ற நிலையில், 21-வது மாடியின் ஏசி மேடையில் அவர் தஞ்சம் புகுந்தார்.
WTF 😳
89 yr old woman in China climbed out of her bedroom window and a few floors down a ventilation shaft, before being rescued by the fire service.
Ive checked it and its real. Happened last week.💯 pic.twitter.com/NHvO19G5Fd
— Patriotic 🇬🇧 Nation (@HoodedClaw1974) April 10, 2026
வெளியே சென்று மீட்பது ஆபத்தானது என்பதால், தீயணைப்பு வீரர்கள் 21-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக அவரை மீட்கத் திட்டமிட்டனர். முதலில் மூதாட்டி கீழே விழுந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு கயிறுகள் மூலம் அவர் பிணைக்கப்பட்டார். பின்னர், ஏசி மேடையின் இரும்பு வேலிகள் வெட்டி எடுக்கப்பட்டு, பாட்டி பாதுகாப்பாக உட்கார வைக்கப்பட்டார்.
இது தொடர்பான விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த மூதாட்டி 27-வது மாடியில் தனியாக வசித்து வந்துள்ளார். தவறுதலாக அவரது படுக்கையறையின் கதவு உள்ளே பூட்டிக்கொண்டது. அவரது செல்போன் வரவேற்பு அறையிலேயே இருந்துவிட்டது.
கதவைத் திறக்க முடியாமல் பதற்றமடைந்த அவர், ஜன்னல் வழியாக வெளியேறி, அதே ஏசி கம்பிகளைப் பிடித்துக் கொண்டே தரைத்தளம் வரை சென்றுவிடலாம் எனத் தவறாகக் கணக்கிட்டு இந்த விபரீத முயற்சியில் இறங்கியுள்ளார்.
சுமார் 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு, தீயணைப்பு வீரர்கள் ஒரு ஸ்டிரெச்சரை ஏசி மேடைக்கும் ஜன்னலுக்கும் இடையே பாலமாகப் பயன்படுத்தினர். அதன் மீது மூதாட்டியை மிக ஜாக்கிரதையாகப் படுக்க வைத்து, ஜன்னல் வழியாக வீட்டின் உட்பகுதிக்கு இழுத்து அவரை மீட்டனர். மேலும் 89 வயதில் மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டு வந்த அந்த மூதாட்டியின் துணிச்சலைக் கண்டு வியந்தாலும், இத்தகைய ஆபத்தான முடிவுகள் உயிரைப் பறித்துவிடும் என எச்சரித்துள்ளனர்.
