76 வயதிலும் சுனில் கவாஸ்கர் காட்டி வரும் சுறுசுறுப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் 5-ம் தேதி காலை அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்தில் பங்கேற்ற அவர், அதே நாள் மாலை மும்பையில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் வர்ணனையாளராகப் பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் இறுதிப்போட்டி, மும்பையில் கௌரவ் கபூர் திருமண வரவேற்பு மற்றும் டெல்லியில் நடைபெற்ற நமன் விருதுகள் எனத் தொடர்ச்சியான பயணங்களில் சற்றும் சோர்வின்றி அவர் பங்கேற்று வருகிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அவரது இந்தப் பயணப் அட்டவணையைப் பார்த்த ரசிகர்கள், வயது என்பது வெறும் எண் தான் என்பதை கவாஸ்கர் நிரூபித்து வருவதாகப் பாராட்டி வருகின்றனர். கவாஸ்கரின் இந்த இடைவிடாத உழைப்பிற்குப் பின்னால் பண ஆசை இருப்பதாகச் சில விமர்சனங்கள் எழுந்தாலும், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வியக்க வைக்கின்றன.

கவாஸ்கரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ₹257 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கிரிக்கெட் தொடருக்கு சுமார் ₹47 லட்சம் வரை வர்ணனை மூலம் வருவாய் ஈட்டும் அவர், ஐபிஎல் மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார். கோவாவில் ₹20 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பங்குகள் என வசதியான வாழ்க்கையில் இருந்தாலும், தனது தொழில் மீதான காதலால் மட்டுமே அவர் இந்த வயதிலும் இவ்வளவு அர்ப்பணிப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.