
பாஜகவில் 75 வயதை கடந்தவுடன் எந்த ஒரு பதவியிலும் தொடர அனுமதிக்கப்படாது என்ற ரூல்ஸ் அமலில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டு 75 வயது நிறைவடைய உள்ளதால், அவர் தொடர்ந்து பிரதமராக இருப்பாரா? இல்லையா? என்பது குறித்து அவ்வப்போது பரபரப்பான விவாதங்கள் எழுகின்றன. இந்நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மோடியின் எதிர்காலம் தொடர்பாக புதிய ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
பிரதமர் மோடி, சமீபத்தில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றது, சீரான விஜயமா அல்லது ரகசிய ஆலோசனையின் ஒரு பகுதியாகவா? என்ற கேள்வி எழுப்பிய சஞ்சய் ராவத், “மோடியின் ஓய்வுக்குப் பிறகு, புதிய பிரதமராக யார் வர வேண்டும் என்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதில், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வரக்கூடும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது” என கூறினார். அவரது இந்த பேட்டி, இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கிசுகிசுவையும் உருவாக்கியுள்ளது.