அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தனது மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆகியோருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோயம்புத்தூருக்கு வந்தார். இதனையடுத்து சின்ன கலங்களில் முத்து என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஜாகிர் உசேனுக்கு வேலை கிடைத்தது. அந்த மில் வளாகத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

அவருடன் ஜாகிர் உசேனின் மனைவியும் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். வீட்டில் 7  வயதுடைய சிறுவன் கைரல் இஸ்லாம் மட்டும் இருந்தான். இதனை தொடர்ந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் முகம் மற்றும் கழுத்தில் காயங்களுடன் கைரல் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மகனை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் கைரல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பனியன் மூலம் சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனால் போலீசார் ஜாகிர் உசேனின் அக்காள் நூர்ஜாகதுன்(32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கழுத்தை நெரித்து சிறுவனை கொலை செய்ததை அவரது அத்தை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து நூர்ஜாகதுன் கூறியதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கைரொன்னிஷாவுக்கும், நூர்ஜாகதுன்னுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அறிந்த மில் உரிமையாளர் நூர்ஜாகதுனை யூனிட் 1- ல் இருந்து யூனிட் 2-க்கு மாற்றினார். தான் வேலைக்கு சேர்த்து விட்ட நிஷா தனக்கு எதிராக இருந்தது நூர்ஜாகதுனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

மேலும் கைரல் இஸ்லாம் தனது மகளுடன் விளையாடுவது நூர்ஜாகதுனுக்கு பிடிக்கவில்லை. இதனால் சிறுவனை பலமுறை கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்த நூர்ஜாகதுன் கைரல் இஸ்லாம் தனது மகளுடன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு கோபம் அடைந்தார். இதனால் தனது மகளை அங்கிருந்து போக சொல்லிவிட்டு பனியன் துணியால் சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல வேலைக்கு சென்றது தெரியவந்தது.