ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டம், பர்தாகி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரேந்திர மஞ்சி (30). இவரது மனைவி ஆர்த்தி குமாரி (26). இவர்களுக்கு ருகி குமாரி (4) என்ற மகளும், விராஜ்குமார் (2) என்ற மகனும் இருந்தனர்.

இவர்களது மகளுக்கு நீண்டகாலமாகத் தீராத நோய் இருந்ததால், சிகிச்சைக்காக அடிக்கடி பணம் தேவைப்பட்டதால், குடும்பத்தில் கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுபோன்ற குடும்பச் சிக்கல்களால் மனமுடைந்த ஆர்த்தி குமாரி, கடந்த 7 மாதங்களாகக் குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஆர்த்தி குமாரி குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். அப்போதும் கணவன் – மனைவிக்கு இடையே கடுமையான சண்டை நடந்துள்ளது. இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில், வீரேந்திர மஞ்சி தனது மனைவி ஆர்த்தி குமாரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

மனைவி இறந்த பின்னர், தனது இரண்டு குழந்தைகளையும் அதேபோலக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தானும் அருகில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.