உத்தரப் பிரதேச மாநிலத்தில் மனதை உலுக்கும் ஒரு கொடூரச் சோகம் அரங்கேறியுள்ளது. 5 குழந்தைகளுக்குத் தாயான மனைவி தனது காதலனுடன் ஓடிப்போனதாலும், கணவனை இழிவாகப் பேசியதாலும் மனமுடைந்த 45 வயது நபர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  கசௌடா கிராமத்தைச் சேர்ந்தவர் லல்லு கௌதம் (45). கூலி வேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்த இவருக்கு, சோனி என்பவருடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 7 முதல் 16 வயது வரை மூன்று பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சோனி தனது ஊரைச் சேர்ந்த பிபின் ராவ் என்பவருடன் திடீரென ஓடிப்போனார். மனைவியைப் பிரிந்து வாடிய லல்லு கௌதம், அவரை எப்படியாவது திரும்ப அழைத்துவர முயன்றதுடன், முதலமைச்சர் குறைதீர்ப்புப் போர்ட்டலிலும் புகாரளித்தார்.இதுகுறித்து லல்லுவின் 16 வயது மகளும், 12 வயது மகனும் கண்ணீருடன் கூறுகையில், “அம்மா வீட்டை விட்டுப் போனதுல இருந்து அப்பா டெய்லி போன் பண்ணி அழுது கூப்பிட்டாங்க. அம்மா திங்கள் கிழமை வர்றேன்னு சொல்லிட்டு வரல. புதன்கிழமை அப்பா திரும்பவும் போன் பண்ணி, ‘நீ வீட்டுக்கு வரலைன்னா நான் விஷம் குடிச்சிடுவேன்’ன்னு சொன்னாங்க. அதுக்கு அம்மா ரொம்ப சாதாரணமாக, ‘போய் விஷம் குடிச்சு செத்துப்போ’ன்னு சொன்னாங்க” என்று கதறி அழுதனர்.

மனைவியின் இந்த இரக்கமற்ற பதிலால் மனவேதனை அடைந்த லல்லு, தனது குழந்தைகளின் கண் முன்னரே மதுவில் விஷத்தைக் கலந்து குடித்தார். உடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட லல்லு, அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் 1 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையை இழந்து பரிதவிக்கும் அந்த 5 பச்சிளம் குழந்தைகளின் கதறல் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.