சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியநரிக்கோட்டையில் ராபர்ட்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதலீடு செய்தால் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரத்தை நம்பி முதலீடு செய்துள்ளார். ஆன்லைனில் ரூபாய் 45 லட்சம் முதலீடு செய்து இவருக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராபர்ட் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ராபர்ட் முதலீடு செய்த 45 லட்சத்தில், 15 லட்சம் ரூபாய் நாமக்கல் மாவட்டம்  நல்லிபாளையத்தைச் சேர்ந்த தினேஷ்குமாரின் (34) வங்கி கணக்குக்கு சென்றது தெரியவந்தது. இவர் டீக்கடை வைத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தினேஷ்குமார் கடன் பிரச்சனையில் இருந்துள்ளதாகவும் பணத்தேவை இருந்ததால் நண்பர் மூலம் வங்கி கணக்கை 1% கமிஷனுக்கு கம்போடியா நாட்டு மோசடி கும்பலுக்கு வாடகைக்கு விட்டதும் தெரிய வந்தது.

இதன் மூலம் 65 பேரிடம் மொத்தம் 3 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இதற்காக ரூபாய் 3 லட்சம் கமிஷன் தினேஷ்குமாருக்கு கொடுத்துள்ளனர். தற்போது இந்த வங்கி கணக்கில் இருந்து 19 லட்சத்தை முடக்கியுள்ளனர். இதுபோன்ற மோசடிகளில் கம்போடியா மற்றும் யூஏஐ நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி யாரும் முதலீடு செய்ய வேண்டாம். அதேபோன்று கடன் செயலி மூலமாகவும் மோசடி செய்கின்றனர். மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை 1935 இலவச எண்ணில் தெரிவிக்கலாம்.