சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களில் நிலவி வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், மெட்டா (Meta) நிறுவனத்தில் பணியாற்றி வந்த டான் கரினோ என்ற ஊழியர் எதிர்பாராத விதமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள மெட்டா அலுவலகத்தில் பணியாற்றி வந்த டான் கரினோ, இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

“எனது மேலாளருடன் வழக்கமான ஒரு கலந்துரையாடல் என்று நினைத்தே நான் சென்றேன். எனது திட்டங்கள் குறித்த முன்னேற்றங்களை விளக்க தயாராக இருந்தேன். ஆனால், கூட்டத்தில் திடீரென மற்றொரு நபர் இணைந்தபோதுதான், இது பணிநீக்கம் குறித்த உரையாடல் என்பதை உணர்ந்தேன்.

பணிநீக்கம் செய்யப்பட்ட அடுத்த நிமிடமே, அவரது அடையாள அட்டை மற்றும் கணினி உள்ளிட்ட உபகரணங்களை ஒப்படைத்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டார். வெளியேறும்போது, “நொறுக்குத் தீனிகள் (Snacks) ஏதாவது எடுத்துக் கொள்கிறீர்களா?” என்று அவரது மேலாளர் கேட்டதாகவும், அவரும் அதை ஏற்றுக்கொண்டதாகவும் டான் குறிப்பிட்டுள்ளார்.

டான் கரினோ ‘திறன்மிகு பணியாளர் விசா’ (Skilled Worker Visa) மூலம் லண்டனில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். தற்போது வேலை பறிபோயுள்ள நிலையில், அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் சட்டப்படி, அடுத்த 60 நாட்களுக்குள் அவர் புதிய வேலை தேடிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர் இங்கிலாந்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Dan Cariño (@ux.dancarino)

தனது பணிநீக்கம் குறித்து டான் மேலும் கூறுகையில்: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்த செயல்திறன் ஆய்வில்  எனது பணி திருப்திகரமாக இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ‘செயல்திறன் குறைபாடு’ என்று கூறி பணிநீக்கம் செய்துள்ளனர். எனது 6 மாத தகுதிகாண் பருவம் முடிவடைய இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். “உங்களால் நிச்சயம் புதிய வேலை தேட முடியும்”, “இந்த கடினமான சூழலையும் நீங்கள் கையாண்ட விதம் சிறப்பு” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தொழில்நுட்பத் துறையில் மூத்த பணியாளர்கள் கூட தற்போது வேலை இழந்து வருவது கவலையளிப்பதாகப் பலரும் பதிவிட்டுள்ளனர்.