இறுதிப் போட்டியில் முகமது சிராஜின் ஆட்டத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி பாராட்டியுள்ளார்..

2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவும், இலங்கையும்  கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.2 ஓவரில் 50 ரன்களுக்குஆல் அவுட் ஆனது. இலங்கையில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் மட்டுமே 17 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் 5 பேர் டக் அவுட் ஆகினர். பின்னர் ஆடிய இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் கில் 27 ரன்களும், இஷான் கிஷன் 23 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக முகமது சிராஜின் புயல் பந்துவீச்சைக் கண்டு உலகமே திகைத்தது. சிராஜ் 7 ஓவர்களில் 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் சிராஜ் என்ற பெருமையை பெற்றார். அதாவது, முதல் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த விருதை வென்ற பிறகு, கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை சிராஜ் வென்றார். கொழும்பு பிரேமதாச மைதானத்தில் அவர் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.

முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருதையும், பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு அர்ப்பணித்தார். அதாவது விருதுக்கான பரிசுத் தொகை அமெரிக்க 5,000 டாலரை (இந்திய மதிப்பு ரூ 4,15,451.75)  கண்டி, கொழும்பு மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். “அவர்கள் நிறைய கிரெடிட்டுக்கு தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.”இந்த ரொக்கப் பரிசு மைதான வீரர்களுக்குச் செல்கிறது. அவர்கள் இல்லாமல் இந்தப் போட்டி நடந்திருக்காது” அவர்களின் பணி இல்லாமல் போட்டி முன்னேறியிருக்காது” என்று போட்டிக்கு பின் கூறினார்.

இதற்கிடையே ஹைதராபாத் வீரரான முகமது சிராஜ் மீது இயக்குனர் ராஜமௌலி பாராட்டு மழை பொழிந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில், ஆசியா கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரகாசித்தார் நம்ம டோலிசௌகி பையன் சிராஜ் மியான். தனது பந்துவீச்சில் பந்தை தடுக்க  லாங்-ஆன் வரை ஓடி அனைவரது மனதையும் வென்றார்” என பதிவிட்டுள்ளார். இந்த ட்விட் வைரலாகி வருகிறது . போட்டியின் 4வது ஓவரை வீசிய சிராஜ் 5வது பந்தை மெண்டிஸ் அடிக்கும் போது, அவரே தடுக்க எல்லைக்கோடு வரை ஓடி சென்றார். பொதுவாக வேகப்பந்து வீச்சாளர் பந்துபோட்டு விட்டு நீண்ட தூரம் ஓடுவது கடினமான ஒன்று. ஆனால் சிராஜ் அவரே பந்துபோட்டு விட்டு அவரே ஆடியது ரசிகர்களை கவர்ந்தது. இதனை பார்த்து கில், கோலி சிரித்தது குறிப்பிடத்தக்கது. இதனை குறிப்பிட்டு ராஜமௌலி பதிவிட்டுள்ளார்.