சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை முகமது சிராஜ் பெற்றார்.

2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவும், இலங்கையும்  கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.2 ஓவரில் 50 ரன்களுக்குஆல் அவுட் ஆனது. இலங்கையில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் மட்டுமே 17 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் 5 பேர் டக் அவுட் ஆகினர்.

பின்னர் ஆடிய இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் கில் 27 ரன்களும், இஷான் கிஷன் 23 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.  இந்த இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக முகமது சிராஜின் புயல் பந்துவீச்சைக் கண்டு உலகமே திகைத்தது. சிராஜ் 7 ஓவர்களில் 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருதையும், பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு அர்ப்பணித்தார். அதாவது விருதுக்கான பரிசுத் தொகை அமெரிக்க 5,000 டாலரை (இந்திய மதிப்பு ரூ 4,15,451.75)  கண்டி, கொழும்பு மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். மேலும் இப்போட்டியில் இதனால் முகமது சிராஜ் சாதனை படைத்துள்ளார்.

முகமது சிராஜ் படைத்த சாதனை :
இலங்கை இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் சிராஜ் 4 விக்கெட்டுகளைவீழ்த்தினார். ஆடவர் சர்வதேச போட்டிகளில் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.  2002 ஆம் ஆண்டு முதல் 3 பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஆண்கள் ஒருநாள் போட்டிகளில் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர் – 2003 இல் வங்காளதேசத்திற்கு எதிராக சமிந்தா வாஸ் (இலங்கை வீரர்), 2003 இல் நியூசிலாந்துக்கு எதிராக முகமது சமி (பாகிஸ்தான் வீரர்) மற்றும் 2019 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடில் ரஷித் (இங்கிலாந்து வீரர்).

சிராஜ் தனது 5 விக்கெட்டுகளை முடிக்க தேவையான பந்துகளின் எண்ணிக்கை 16 மட்டுமே. இது ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இது வேகமானதாகும். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக (குறைந்த பந்துகளில்) 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் சிராஜ் என்ற பெருமையை பெற்றார். 2003 உலகக் கோப்பை போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் சமிந்த வாஸ் தனது முதல் 5 விக்கெட்டுகளுக்கு 16 பந்துகளை எடுத்தார் , அதே நேரத்தில் அமெரிக்காவின் அலி கானும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெர்சி அணிக்கு எதிராக 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை எடுத்தார் .

குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கடந்த 4வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் சிராஜ் பெற்றுள்ளார். இது தவிர, ஒருநாள் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை சிராஜ் பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் 28 இன்னிங்ஸ்களில் சிராஜ் 53 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.