உலகக் கோப்பையை வென்ற பிறகு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா நகைச்சுவையாக கூறினார்.

2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவும், இலங்கையும்  கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கையில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் மட்டுமே 17 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் 5 பேர் டக் அவுட் ஆகினர். இது ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கையின் 2வது குறைந்தபட்ச ஸ்கோராகும்.

இந்த போட்டியில் முகமது சிராஜின் 6 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியாவின் 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ராவின் 1 விக்கெட்டும் காரணமாக ஒட்டுமொத்த இலங்கை அணியும் சரிந்தது. முகமது சிராஜின் புயல் பந்துவீச்சைக் கண்டு உலகமே திகைத்தது. சிராஜ் 7 ஓவர்களில் 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

பின்னர் இலக்கை துரத்த இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா களமிறங்கவில்லை. இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். கிஷன் 18 பந்துகளில் 23 ரன்களுடனும், சுப்மான் கில் 19 பந்துகளில் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 8வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது. ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இந்திய அணி 2 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

இந்த வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தார். “நாங்கள் இதுபோன்ற ஒரு போட்டியை  இங்கு வந்து வெல்வது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது” போட்டியின் மூலம் நாங்கள் நிறைய பார்த்தோம் என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். இதனால் சத்தம் அதிகமாக கேட்டதால் அவரால் பேசமுடியவில்லை. இதனால் ரோஹித் சர்மா அரே உலகக் கோப்பை ஜீத்னே பே பாத் போடோ யே சப்.. ( உலகக் கோப்பையை வென்ற பிறகு பட்டாசுகளைவெடியுங்கள்)” என்று சிரித்தபடி சொன்னார். அங்கிருந்த செய்தியாளர்களும் சிரித்தனர். பின்னர் தனது செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதனிடையே இந்திய அணியின் சாம்பியன் பட்டம் வென்றதற்கு முன்னாள் இந்திய வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் நாடு முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இந்த வெற்றியை விட உலக கோப்பையை வெல்வதே இந்திய அணியின் மிகப்பெரிய கனவாக உள்ளது. இந்த வெற்றி இந்திய அணிக்கு ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணி அடுத்ததாக செப்டம்பர் 22 அன்று தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. உலக கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு இது சிறந்த பயிற்சியாக இருக்கும்.

https://twitter.com/Lvr_Hyper45/status/1703467697651298595