ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரத்தை சேர்ந்தவர் விஜயகோபால் (38). இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெர்மின் (36) சென்னையை சேர்ந்தவர். இவர்களுக்கு நிவேதா பெத்தனாட்சி (14), திஸ்வர் (10) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
விஜயகோபால் தனது மனைவி பெயரில் வெட்டுக்காடு பகுதியில் நிலம் வாங்கி வீடு கட்டி, அந்த வீட்டில் ஜெர்மின் மற்றும் குழந்தைகள் வசித்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக கடலாடி கோர்ட்டில் விவாகரத்து வழக்குப்போடப்பட்டது.
குழந்தைகளுக்காக விஜயகோபால் மாதந்தோறும் பராமரிப்பு தொகை வழங்கி வந்தாலும், கடந்த 6 மாதமாக அந்த பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெர்மின் தனது பிள்ளைகளுடன் இரவு உணவு உண்டுக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த பயங்கர ஆயுதம் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து தாக்கியது. சில நொடிகளில் குழந்தைகளின் கண்முன் ஜெர்மினை கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் வெட்டிச்சாய்த்தனர். சம்பவ இடத்திலேயே ஜெர்மின் உயிரிழந்தார்.
குழந்தைகளை அரிவாளால் மிரட்டிய கும்பல் பின்னர் தப்பிச்சென்றது. தங்களது கண்முன் தாயை கொடூரமாகக் கொல்லப்பட்டதை பார்த்த பிள்ளைகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த கொலை சம்பவம் கூலிக்கொலை எனவும், யாரோ திட்டமிட்டு முகமூடி கும்பலை அனுப்பி இருப்பார்கள் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரகாண்டில் உள்ள கணவர் விஜயகோபாலை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர் விரைவில் ஊருக்குவந்து போலீசாருக்கு பதிலளிக்க உள்ளதாக கூறியுள்ளார். குடும்பத் தகராறு, சொத்து பிணைப்பு உள்ளிட்ட கோணங்களிலும் போலீசார் விசாரணையை விரிவாக்கியுள்ளனர்.
