நவீன உலகம் மனிதர்களைத் தனித்தனித் தீவுகளாக மாற்றி, ‘சுயநலம்’ மற்றும் ‘தனிமை’ என்ற சுவர்களுக்குள் சுருக்கிவிட்டது. “நான், என் மனைவி, என் குழந்தை” என்ற குறுகிய வட்டத்திற்குள் மனிதநேயம் சுருங்கிப்போன இந்த அவசர யுகத்தில், ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம், ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு உன்னதமான பாசப் பாடத்தைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

குர்லபள்ளி என்னும் அந்த எளிய கிராமத்தில் வாழும் ‘நாகப்பா’ குடும்பத்தின் கதையைப் படிப்பது, வறண்டுபோன ஒரு பாலைவனத்தில் குளிர்ந்த நீர்ச்சுனையைக் காண்பது போன்றது. ஆறு தலைமுறைகளாக, தங்களின் முதியவர்களின் ஆசிர்வாதத்தோடும், குழந்தைகளின் நெஞ்சாரும் மழலைச் சத்தத்தோடும், மொத்தம் 83 மனிதர்கள் ஒரே குடும்பமாக, ஒரே ஆன்மாவாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது கேட்பதற்கே ஏதோ ஒரு புராணக் கதை போலத் தோன்றலாம். ஆனால், அதுதான் அங்கே நிஜம்!

நான்கு வீடுகள்… ஆனால் ஒரே சமையலறை!

சுவர்கள் பிரிந்த அடுக்குமாடி (Apartment) கலாச்சாரத்தில், பக்கத்து வீட்டில் யார் வாழ்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் வாழும் மனிதர்களுக்கு மத்தியில், நாகப்பா குடும்பம் ஒரு பேரதிசயம். பெருகிவிட்ட மக்கள் தொகை காரணமாக அவர்கள் பக்கத்துப் பக்கத்திலுள்ள நான்கு வீடுகளில் வசித்தாலும், இவர்களது இதயங்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ்தான் துடிக்கின்றன.

ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் ஒரே சமையலறைதான். விடிந்தால் 83 பேருக்கும் அங்கே அன்புடனும் பாசத்துடனும் உணவு சமைக்கப்படுகிறது. வயலில் விளையும் உழைப்பிலிருந்து வரும் வருமானம் அனைத்தும் ஒரே கல்லாப்பெட்டியில்தான் சேர்கிறது.

யாரிடமும் “இது என்னுடையது” என்ற எண்ணம் இல்லை; “இது நம்முடையது” என்ற ஒற்றை மந்திரம்தான் அந்தக் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. எழும் குடும்பப் பொறுப்புகள் மற்றும் சுமைகள் அனைத்தும் அத்தனை தோள்களிலும் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

 ஒரு கூட்டுக்குடும்பச் சொர்க்கம்:

மனித உறவுகளின் ஆகச்சிறந்த பேரழகை நான் இந்த 83 இதயங்களின் சங்கமத்தில்தான் காண்கிறேன். ஒரு குழந்தை அழும்போது அங்கே சமாதானப்படுத்த பத்துத் தாய்களும், ஒரு முதியவர் தள்ளாடும்போது தாங்கிப் பிடிக்க இருபது இளந்தேள்களும் இருக்கும் அந்த சொர்க்கம் இந்த பூமியில் எத்தனை பேருக்கு வாய்க்கும்?

இங்கு பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இவர்களின் வீட்டைத் தேடி வெளியே இருந்து வருவதில்லை, மாறாக இவர்களின் வீடே எப்போதும் ஒரு திருவிழாக் கூடமாகத்தான் காட்சியளிக்கிறது. வயதானவர்களின் சுருக்க விழுந்த கைகளில் இருக்கும் முதிர்ந்த அனுபவ அறிவும், இளைய தலைமுறையின் நவீன துடிப்பும் ஒரு புள்ளியில் இணைந்து, தங்களின் முன்னோர்கள் விதைத்த ‘கூட்டுக் குடும்பம்’ என்ற ஆலமரத்தை இன்னும் ஆழமாக வேரூன்றச் செய்திருக்கிறார்கள்.

 நாம் தொலைத்த பொக்கிஷம்:

காலம் எத்தனையோ மாற்றங்களைக் கடந்து, மனிதர்களைப் பணத்தின் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருந்தாலும், பாசமும் விட்டுக்கொடுத்தலும் இருந்தால் பூமியிலேயே ஒரு சொர்க்கத்தை உருவாக்க முடியும் என்பதைத் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது நாகப்பா குடும்பம்.

அவர்கள் வாழும் அந்த இல்லம் வெறும் செங்கற்களாலும் மணலாலும் ஆன கட்டிடம் அல்ல; அது அன்பாலும், தியாகத்தாலும், பிரிக்க முடியாத கூட்டுப் பிரார்த்தனையாலும் கட்டப்பட்ட ஒரு பாசக் கோவில். நாகப்பா குடும்பத்தின் இந்தக் கதை வெறும் செய்தியல்ல; அது சிதைந்து வரும் நம் சமூக விழுமியங்களை மீட்டெடுக்கும் ஒரு உன்னதக் காவியம், நாம் அவசரத்தில் தொலைத்துவிட்ட நம் பாரம்பரியப் பொக்கிஷம்!

“>